புதன், 31 டிசம்பர், 2008

புத்தாண்டு உறுதியாக

புத்தாண்டு உறுதியாக தினமும் காலையில் ஐந்தரை மணிக்கு எழுந்து பூங்காவில் நடக்கச் செல்வோம் என்று முடிவு செய்வோம். முதல் இரண்டு வாரங்களுக்கு சுறுசுறுப்பாகப் போகும். ஒவ்வொரு நாளும் சாதிக்கும் பூரிப்பில் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். ஆரம்பச் சிக்கல்களை சமாளித்து இப்படியே வாழ் நாள் முழுவதும் இந்தப் பழக்கம் தொடரப் போகிறது என்று இருக்கும் போது ஓசை இல்லாமல் சறுக்கல்கள் ஆரம்பிக்கும்.
“இன்று காலையில் தூறலாக இருக்கிறது, எப்படி வெளியே போவது?”“நேற்றைக்கு இரவு வெளியூரிலிருந்து வர தாமதமாகி விட்டது. சீக்கிரம் எழுந்திருக்க முடியாது!”“இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே, ஒரு நாளாவாது அதிக நேரம் தூங்கிக் கொள்வோம்!”
இல்லையென்றால், விடிகாலையில் கழுத்தைக் கட்டிக் கொண்டு விடும் உறவுகள், உடல் நிலை சரியில்லாமல் போதல் என்று பல வடிவில் சோதனைகள் வர ஆரம்பிக்கின்றன. இரண்டாவது, மூன்றாவது மாத முடிவில் பார்த்தால் புத்தாண்டு தீர்மானமும் ஒரு சில வாரப் பழக்கமும் வரலாற்றுப் புத்தகங்களுக்கு விடப்பட்டிருக்கும்.
புதிய பழக்கத்தில் ஆரம்பச் சிக்கல்கள், நடை முறை தடைகள். ‘மாலையில் எண்ணெய்ப் பலகாரம் சாப்பிட மாட்டேன்’ என்று முடிவு செய்ந்திருந்தால், அந்த நேரத்தில் பசிக்கு வேறு என்ன சாப்பிடுவது என்று ஆரம்ப நாட்களில் குழப்பம் ஏற்படும். நாக்குக்கும் வயிற்றுக்கும் ஒத்துப் போகும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பழக வேண்டும்.
வழக்கமாக வரும் நண்பர்கள் சமோசா வாங்கி வந்து விட்டதைச் சமாளிக்க வேண்டும். இந்த ஆரம்ப கால சவால்களைச் சமாளித்து முன்னேற, தீர்மானதை எடுக்க வைத்த மன உறுதி போதுமானதாக இருக்கும். இங்கேயே கைவிரித்து விடுபவர்கள் தமது தீர்மானத்தின் நன்மையைப் பற்றி முழுதும் நம்பவில்லை, அல்லது போதிய மன உறுதி இல்லை என்று சொல்லி விடலாம்.
முதலில் சொன்ன இரண்டாவது கட்டச் சோர்வு, நமக்குத் தெரியாமல் பதுங்கி வந்து கவிழ்த்து விடுவது. பெரும்பாலானவர்களின், பெரும் மன உறுதி படைத்தவர்களின் தீர்மானங்களை பாறையை உடைக்கும் பசுஞ்செடி வேர் போலப் பிளந்து போட்டு விடும்.
முதலில் தீர்மானத்தை நண்பர்களுக்கும் கூட வசிப்பவர்களுக்கும் தெளிவாகத் தெரியப்படுத்தி விட வேண்டும். இதனால், எல்லோரிடமும் மானம் போய் விடக் கூடாது என்ற கூடுதல் பாதுகாப்பு மனம் தளரும் போது கிடைக்கும். கூடவே அவர்களிடமிருந்து வரும் தூண்டுதல்கள் குறையவும் வழி வகுக்கும். தெரியாமல் நமது உறுதியை உடைக்க முயல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விடும்.
இரண்டாவதாக, ஒரு முறை தவறி விட்டால் பெரிய பாவம் செய்ததாக எண்ணி எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விடக் கூடாது. எத்தனை முறை சறுக்கினாலும், எழுந்து தொடர்ந்து ஓட வேண்டும்.
மூன்றாவதாக, குறிப்பிட்ட நேரம் மற்றும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு பழக்கத்தைச் செயல்படுத்துவது உதவினாலும், அந்த நேரம், இடம் தவறி விட்டால் மாற்று இடத்தில் செய்வதற்கான வசதி/ஏற்பாடு வைத்துக் கொள்ள வேண்டும். மழை பெய்வதால் வெளியே நடக்கப் போக முடியா விட்டால், வீட்டுக்குள்ளேயே அதே நேரத்தில் நடப்பதற்கு தற்காலிக ஏற்பாடு திட்டமிட்டு வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் பழக்கத்தைச் செய்ய முடியாவிட்டால், நேரம் கிடைக்கும் போது செய்து விட வேண்டும்.
நான்காவதாக, நம்முடைய மன உறுதிக்கு அடுத்தக் கட்ட அரணாக அடுத்தவர்களின் உதவியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். காலையில் நடக்கப் போகும் போது, கூடவே பக்கத்து வீட்டுக்காரரையும் கூட்டிக் கொண்டு போனால், நமது மனம் சுணங்கினாலும் அவர் காத்திருப்பாரே என்று எழுந்து விடுவோம். அல்லது அவரே வந்து எழுப்பி விடுவார். நாட்குறிப்பு எழுதினால் வலைப்பூ ஒன்றில் பதிக்கலாம். ஒரு நாள் தவறினால் அந்த பதிப்பு விட்டுப் போவது மனதுக்குப் பிடிக்காமல் ஒரு தூண்டுதல் கூடுதலாகக் கிடைக்கும்.
இதுதான் கதை. கடந்து ஒரு வாரத்தில் இரண்டாவது நாளாக நேற்று நாட்குறிப்பு எழுதவில்லை. முதலில் ஒரு சாக்கு. நேற்று மற்றொரு சாக்கு. இன்று விடுமுறை நாள், இரவில் தாமதமாகத் திரும்பி வந்த நாள். இன்றும் கட் அடித்து விடலாம் என்று தோன்றாமலா இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக